Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, June 29, 2012

ஜும்மா நாளின் சிறப்பு


  • வெள்ளி ஜூம்மாவுக்கு விரைவாக பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி நாம் அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு பள்ளிக்கு விரைவாக செல்வதை பழக்கமாக்கிக் கொள்வோம்..
  • குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
”பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.
ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்



  • இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)

  • ”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள்.

  • இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
  • இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும்.

  • நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்: ”உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்”. (நூல்: புகாரி.)
  • நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், ”நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?” என்று கேட்க, அவர் ”இல்லை” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக” என்றார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)
  • வெள்ளிக்கிழமை இமாம் குத்பா ஓதிக்கொண்டிருந்தாலும் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை தொழுதுவிட்டுத்தான் உட்காரவேண்டும்



ஜூம்மாவுக்கு நேரம் தாமதமானால்:
  • ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..” (நூல்: புகாரி 930)